சனிக்கிழமை வரும் ரோஹிணி நாள் வழிபாடு

ரோஹிணி நட்சத்திரம் எத்தகைய பீடைகளையும் போக்க வல்ல ஸ்ரீகிருஷ்ண செல்வப் பீட சக்திகளைப் பெற்றுள்ளது.

குசேலர், ரோஹிணி கூடிய சனிவாரத்தில் தம் பெரிய குடும்பப் பரிவாரத்தோடு, ஸ்ரீகிருஷ்ண விரத பூஜைகளைப் பூண்டு வழிபட்டு வர, கண்ணனே கனிந்து உவந்து வந்து குசேலருக்கு உயரிய செல்வ கடாட்சத்தை அருளினார்.

வறுமைப் பீடையையும், மனப் பீடையையும் போக்க வல்லதே ரோஹிணி கூடும் சனிவார நாளில் ஏற்று ஆற்றும் நோன்புடைக் கண்ணபிரான் வழிபாடும் குடும்பத்தோடு கூடிய ஸ்ரீகிருஷ்ண தரிசனமும் ஆகும்.

சனிக்கிழமை வரும் ரோஹிணி நாளின் அம்சங்களை வைத்து, ‘ரோஹிணித்த சனி, சனித்த ரோஹிணி’ என்ற இரண்டு வகையிலான சனிவார வகைகள் உண்டு.

சனிக்கிழமை அன்று சூரியோதயத்திற்கு முன்னரேயே ரோஹிணி நட்சத்திரம் நிறைந்திட, இவ்வாறு ஏற்கனவே ரோஹிணி பூரித்திடத் தோன்றும் சனிக் கிழமை, ‘ரோஹிணித்த சனியாகும்’.

சனிக் கிழமை, சூரியோதயத்திற்குப் பின் ரோஹிணி நட்சத்திரம் ஏற்பட்டிடில், ‘சனித்த ரோஹிணி’ ஆகும்.

‘பணம் வந்தவுடன் கரைவதற்குக்’ காரணமான பலத்த கரிதோஷங்களை நீக்க வல்லதே ‘சனித்த ரோஹிணி’ தின பூஜைப் பலனாகும்.

இவ்வாறு ‘சனித்த ரோஹிணி நாளில்’ ஸ்ரீகிருஷ்ண பகவான், ஜீவ வாழ்க்கையின் பல்துறைகளிலும் வளம் தரும் ஆயுட் சேம மூர்த்தியாக அருள்கின்றார்.

“ரோஹிணித்த சனிவாரம்” வந்தமையும் நாளில், ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையது.

‘ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாடு’ என்பது, பரமாத்வாமாம் ஸ்ரீகிருஷ்ண பகவான் தம் பத்னியர்கள், பிள்ளைகள், பேரன்களோடு - குடும்பத்தோடு - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் அருள்வது போலானதாகும்.

மதுரை அருகே திருத்தங்கல் ஆலயத்தில் பெருமாளப்பர், ஜாம்பவதி தேவியோடு மிகவும் அபூர்வமாகப் அருள்கின்றார்.

ஸ்ரீகிருஷ்ண பரிவாரத் தரிசன ஆலயங்களில், தத்தம் குடும்பத்தோடு தரிசித்து, அன்னம், ஆடைகள், பழங்கள், பாதணிகள் போன்ற எட்டு விதமான தான தர்மங்களையும் அவரவர் குடும்ப வசதிக்கு ஏற்ப நிகழ்த்துதலால், குடும்பத்தில் நல்ல மன அமைதி உண்டாகும்.
 
Top