பிள்ளையார் சிலையைத் திருடுதல் சரியா?

எங்கிருந்தாவது பிள்ளையார் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தால்தான் விசேஷமானது என்ற கருத்து நிலவி வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். இன்னும் சொல்லப்போனால் பிள்ளையாரைத் திருடி வந்து இன்னொரு இடத்தில் வைக்கின்ற பழக்கம் கூட, இப்போதும் சில இடத்தில் இருந்து வருகிறது. ஆன்மீகத்திற்கு இது ஏற்புடையதல்ல. பலவித வேத, மந்திர, தந்திர, யந்திர சக்கிரங்களுடனும் மணி மந்திரங்களுடனும் ஓர் இடத்தில் தெய்வ வடிவு கொண்ட விநாயகரைப் பெயர்த்து எடுப்பது மிகவும் பாவகரமான செயலாகும். இதற்கு உடந்தையாக இருப்போர் சொல்லொனாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்பதை உணர்ந்திடுக. எனவே பிள்ளையார் சிலையைத் திருடி வந்து இன்னொரு இடத்தில் வைக்கின்ற வழக்கத்தை பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடித் தடுப்பீர்களாக!

மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ இப்பெரும் பிழை இதுகாறும் செய்திருப்பினும் இனியேனும் விழிப்புணர்ச்சி கொண்டு இத்தகைய மாபெரும் குற்றத்தை செய்யாதிருப்பார்களாக! புதிதாக பிள்ளையார் கோயிலை நிர்மாணிக்க வேண்டுமெனில் ஒரு புதிய சிலையைத் தக்க ஆகம விதிகளுடன் அமைத்திட வேண்டும். ஓர் இடத்தில் உள்ள பிள்ளையார் சிலையை மற்றொரு இடத்திற்குப் பல நியாயமான காரணங்களால் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய ஆகம நியதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் பூஜையில் உள்ள எந்த விநாயகர் சிலையையும் மற்றொரு இடத்தில் வைப்பதற்காகக் கவர்ந்து செல்லுதல் கூடாது. இவ்வாறு திருடப்பட்ட பிள்ளையார் சிலைக்குத்தான் தெய்வீக சக்தி அதிகம் என்று எண்ணுவது என்பது அறியாமையின் பாற்பட்டதாகும். இதனால் விளையும் விபரீதங்களும் தீவினைகளும் பலப்பல என்பதை இனிதேனும் அறிந்து தெளிந்து நல்ல பாடத்தைச் சமுதாயத்திற்கு புகட்டுவோமாக.
 
Top