உழவாரத் திருப்பணி

குட்டி கதை : திருப்பணியின் மகிமை...

ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு தயவு கூர்ந்து அந்த மட்டையை எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்க, தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கியவன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான்.

இவன் செய்த பாவங்களின் பலனாக, இவன் குழந்தை பிறக்கும் தருவாயில் இறந்து போய், இவனுக்கு குலம் தழைக்காது போவதே விதியாக இருந்தது. எம தூதர்கள் இவன் இல்லம் அடைந்து பாசக்கயிற்றை வீச தயாரானார்கள். திடீரென்று சிவலோகத்திலிருந்து இரு பூதகணங்கள் தோன்றி, எமதூதர்களை தடுத்தனர். குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்தில், அடியவர் ஒருவருக்கு இவர் சிறு உதவி செய்த காரணத்தால், அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. ஆகவே, இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை என்றனர். மேலும் சுகப்பிரசவத்திற்கு வேண்டியவற்றை செய்ய எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். ஆகவே திரும்பி செல்லுங்கள் என்று எமதூதர்களை திருப்பி அனுப்பி விட்டனர் சிவகணங்கள். தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்தையும், தன் உதவியினால் அது விலகியதையும் ஜோதிடர் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தன் திருந்தி கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து வரலானான். கோவிலை சுண்ணம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இவன் இப்பலனை அடைந்தால், அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை பாருங்கள். ஆனால், நாம் இந்த உழவாரத் திருப்பணியை, கிடைக்க போகும் புண்ணியத்திற்காக அல்ல, அவன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பினால் செய்ய வேண்டும்.

கருணையே உருவான இறைவன் இவ்வுடம்பு, நல்ல மனம், புத்தி, சித்தி, அகங்காரம், உலகம், கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், வீடு, வாசல், பொன், பொருள் என்று நாம் கேட்காமலேயே நமக்கு அருளியிருக்கிறார். இதற்காக நாம் அவரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு புரியவேண்டும். இறைவனை உணர்ந்து, அவரோடு உறவை ஏற்படுத்தி, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாக, சைவ சமயம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நான்கு வழிகளை குறிப்பிடுகிறது. நம் தாய் தந்தை சகோதரர்களிடம் அன்பு செலுத்துவதைப் போல, இறைவனிடமும் ஆழ்ந்த அன்பு செலுத்தவேண்டும். அந்த அன்பை நாம் மேற்கூறிய வழிகளில் வெளிப்படுத்தலாம். இதில் மிகவும் எளிதானது சீலம் என்ற இறைத் தொண்டு புரிவதே. இறைவன் உறையும் வீடாகிய திருக்கோவில்களில் நீரும், பூவும், பாமாலையும் சாற்றி வழிபடுதல், கோவில்களை தூய்மை செய்தல், அலங்கரித்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல், பூச்செடிகள் நட்டு வளர்த்தல், மலர் பறித்தல், திருமுறைகளை ஓதுதல், எழுதுதல், மாலை கட்டுதல், நீர் சுமந்து கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல், குளம் அமைத்து கொடுத்தல், சந்தனம் அரைத்தல், கோவில் திருவுருவங்களை துலக்குதல், ஊதுபத்தி ஏற்றுதல், திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், பல்லக்கு சுமத்தல், வடம் பிடித்தல், தீவட்டி ஏந்துதல், பழமையான கோவில்களை புதுப்பித்தல், பூசை பொருட்கள் வாங்கித் தருதல், பூசை செலவுகளை ஏற்றல், அன்னதானம் வழங்குதல், பரிமாற உதவிடல், திருநீறு அணிதல், கண்டமணி (உருத்திராக்கம்) அணிதல், சிவநாமம் சொல்லல், பிறரையும் இத்தொண்டு செய்ய ஊக்குவித்தல் போன்று எண்ணற்ற தொண்டுகளை புரிந்து வரலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொண்டை தொடர்ந்து வழுவாமல் செய்து வருவது சிறப்பு. இன்றைய தினங்களில் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ஏதாவது ஒரு சிவாயத்திற்கு சென்று உழவாரப் பணி மேற்கொள்ளலாம். 200 அல்லது 300 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து செய்தால் எத்தகைய பணியினையும் விரைந்து செய்ய இயலும். பழைய கோவில்களை ஆகம விதிப்படி புதுப்பித்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 63 நாயன்மார்கள் யாவரும் இது போன்ற தொண்டுகளை வழுவாமல் பற்றி செய்து வந்தவர்களே. நாயன்மார்களின் வரலாற்றை அறிந்து யாவருக்கும் உரைப்பதும் ஒரு தொண்டு. உழவாரப்பணி என்றாலே நம் நினைவுக்கு வருவது உழவாரப் படை ஏந்திய திருநாவுக்கரசர் பெருமான். சமண சமயத்தால் பூசையின்றி இருந்த சிவாயலங்களுக்கு உழவாரப் பணி செய்தார். இவருக்கு உழவாரப் பணி செய்ய வேண்டுகோள் விடுத்து முன்னோடியாக இருந்தவர் இவர் சகோதரி திலகவதியார். இவர்கள் வரலாற்றை அறிவோம்.

உழவாரத் திருப்பணியின் மகிமைகள்

இறைவனுக்கு செய்யும் தொண்டினால் வரும் மனநிறைவு பேரின்பம். இந்த பேரின்பத்தை அனுபவித்தவரிடம் கேட்டு பாருங்கள். இந்த தொண்டு இறைவனோடு உங்களைப் பிணைக்கும் மிக வலுவான பாலமாக அமையும். இந்த தொண்டிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை. பலனை எதிர்பாராமல், உள்ளன்போடு செய்யும் தொண்டினை ஏற்கும் இறைவன், உங்களை ஒரு குறையும் வராமல், நல்வழியில் நடத்தி செல்வார். என் கடன் பணி செய்து கிடப்பதே.
 
Top