ஆதிசங்கரர் ஜெயந்தி

கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாத ரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார்.

சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது.

பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார்.

காலச்சக்கரத்தின் சுழலே வாழ்க்கை. அது எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். இந்த சம்சார பந்தத்தின் (சக்கரத்தின்) மையத்தில் உள்ள அச்சு நான் என்னும் அகங்காரம். திருஷ்னைராகம் - அதாவது இச்சை அழிந்துவிட்டால் அகங்காரமும் அழியும். பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது நாட்டில் அறம் குறைந்து தீயொழுக்கம் பெருகியது. மக்கள் தர்மநெறியைப் புறந்தள்ளினர். வேதசமயம் நலிவுற்று நின்றது.

கயிலையின் வடவாயிலின் கீழ் சின்முத்திரை தாங்கி யோகப்பிழம்பாய் வீற்றிருந்த பரமேஸ்வரன் நமது தேசத்தின் அவல நிலையைக் கண்டு, அவர்களை நல்வழியில் செலுத்த திருவுளம் கொண்டார். தென்னாட்டில், கேரள மாநிலத்தில் சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியின் மகவாக அவதரித்தார். பெற்றோர்களும் பண்டிதர்களும் குழந்தைக்கு சங்கரன் என்னும் பெயரைச் சூட்டினார்கள். சம் என்ற சொல் நித்யமான பேரின்பத்தைக் கொடுக்கும். சங்கரராகத் தோன்றியவர் சிவன். சிவம் என்றால் மங்களம், அழியாப் பொருள். அந்த மங்களமான நிலையை பிறருக்கு கையில் வழங்குவதற்கு ஏற்றவர் (சம்-கர) சங்கரர்.

சங்கரருக்கு உபநயனம் நடக்கும் முன்பே, தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். ஐந்தாவது வயதில் உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பி வைத்தார் தாயார். சகல கலைகளுக்கும் அதிபதியான சங்கரர் மானுட சரீரம் கொண்டதற்கு ஏற்ப கலைகளைப் பயின்றார் என்று சொல்லலா மே தவிர, எல்லா கலைகளுமே அவரை சரணடைந்தன. சங்கரருக்கு எட்டு வயது நடக்கும் போது ஒருநாள் பூர்ணா நதிக்கரை யில் நீராடிக் கொண்டிருந்த போது ஒரு முதலை அவர் காலைக் கவ்வியது. இதையே காரணமாகக் காட்டி சந்யாசம் பெற தன் தாயிடம் அனுமதி பெற்று, முதலலை வாயிலிருந்தும், இவ்வுலக சம்சார பந்தங்களிலிருந்தும் நிரந்தரமாகத் தன்னை விடுவித்துக்கொண்டார்.

அன்னை ஆர்யாம்பாளிடம் அந்திமக் காலத்தில் வருவதாக வாக்களித்து தேற்றி அன்புடன் விடைபெற்றார். தேவர்களும் தேடும் தன் திருப்பாதங்களால் குருவைத் தேடி அலைந்தார்.

நமது தர்மத்தின் அடிப்படைக் கொள்கை தியாகமாகும். துறவியானாலும் குடும்பஸ்தனானாலும் அவர்களுடைய வாழ்க்கையின் லட்சியம் தியாகமேயாகும். சங்கரரின் தாயைப் பாருங்கள். அவளுடைய அருமையான ஒரே புதல்வனை தன் வாழ்வின் அந்திமக் காலத்தில் ஒரே ஊன்று கோலானவனை ஒரே நிமிடத்தில் உதறி தியாகத்தின் லட்சியத்தின் சிகரத்தை அடைந்துவிட்டாள். ஆனால் இந்த சிகரத்தை எட்டிப்பிடிப்பதற்கு, தனது ஒரே புதல்வனை துறவியாக்கி உலகிற்கு தியாகம் செய்வதற்கு அவள் தனது அகங்கார, மமகாரங்களுடன் மிகவும் போராட வேண்டி வந்தது. இப்போராட்டத்தில் தியாகமே வென்றது. அதனால்தான் அவளுடைய அந்திமக் காலத்தில் பிரும்ம வித்துக்களுக் கெல்லாம் பரமாத்மாவாகத் திகழும் அந்த ஈஸ்வரனே அவளுக்கு இறுதிக் கடன்களைச் செய்து முக்தியளித்தார்.

காலடியில் ஒரு ஏழை நம்பூதிரி இல்லத்துப் பெண்மணி, சங்கரர் பிச்சை எடுக்க வந்தபோது அவருக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லையே என்று மனம் வருந்தினாள். அந்த வருத்தமே அவளுடைய மமகாரத்தை அழித்தது. அவளுடைய உள் மனதிலிருந்த என்னுடைய இல்லம்; இவருக்கு கொடுக்க ஏதாவது என்னிடம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவளை அறியாமலேயே அழித்தது. உலக மாதாவா கிய லட்சுமிதேவியை ஆவிர்பவித்து, தங்கமயமான நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்து, அந்த ஏழைப்பெண் குடும்பத்தை உயர்த்திவைத்தார் சங்கரர்.

கடவுளை எங்கும் எப்பொருளிலும் காண்பேத அகங்காரம் அடங்க வழி. தர்மத்தில் கடைசி நிலை இதுவே. மனைவி, மக்கள், சுற்றத்தார். அயலார் எல்லாரும் கடவுளின் அம்சமே. இந்த எண்ணத்துடன் தான் அவர்களுக்கு சேவை செய்யவேண்டும். சங்கரர் தன் தாயாராகிய ஆர்யாம்பாளை தன்னைப் பெற்ற தாய் என்று மட்டும் கருதாமல், ஜகன் மாதா ஸ்ரீசாரதா தேவியாகவே கருதினார். தன் மாதா மரணப் படுக்கையில் இருந்தபோது, சங்கரர் அருகில் அமர்ந்து துதித்த சிவ, விஷ்ணு துதிகளை ஆராய்ந்து பார்த்ததால், அவருடைய தாயார் சிவ, விஷ்ணுக்களின் அம்சமே என்பது புலனாகிறது. சிவ, விஷ்ணு ஸ்வரூபம் பிரும்ம ஸ்வருபத்தினின்றும் வேறல்ல என்பதை அறியமுடிகிறது.

கடவுள் உருவத்துடன் கூடியவரா அல்லது அருவமா? உருவமுடையவரானால் ஒன்றா, பலவா? எந்த உருவம் உயர்ந்தது? காலடி இதற்கு விடையளிக்கிறது.

சங்கரருடைய இளமைப் பருவத்தில் அவருடன் இணைந்த கோயில்களில், வனத்திலிருக்கும் மாணிக்கமங்கலம் கார்த்யாயினி கோவில், திருச்சிவப்பேரூர் என்ற திருச்சூரில் ஒரு சிறு குன்றின் மேலுள்ள சிவன் கோவில், வெள்ளி மான் துள்ளியிலுள்ள சிவன் கோவில் பூர்ணா நதிக்கரையிலுள்ள கிருஷ்ணன் கோவில், சங்கரருடைய இல்லத்தில் ஆராதனை செய்யப்பட்டு வரும் சாளக்ராமங்கள் போன்றவை சங்கரரின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை.

அதாவது காட்டிலும், குன்றிலும், நதிக்கரை யிலும், வீட்டிலும் ஆராதிக்கப்பட்டுவந்த பற்பல வகை உருவமுள்ள தேவதைகள் எல்லாம் ஒரே சச்சிதானந்த பிரம்ம சொரூபத்தின் வெவ்வேறு உருவங்களாகும். ஒரே தண்ணீர் ஓரிடத்தில் பனிக்கட்டியாக வும், வேறொரு இடத்தில் உப்பு நீராகவும், இன்னொரு இடத்தில் நிர்மலமாகத் தெளிந்தும் இருப்பதுபோல பிரம்மம் ஒன்றே பல உருக்கொண்டுள்ளது என்று சங்கரர் உபதேசிக்கிறார்.

பகவானுடைய உபதேசங்களே வேதங்களாகும். சிருஷ்டி தத்துவத்தை களங்கமறப் பரிசீலிப்பவை வேதங்கள். இம்மையில் அனைத்து இன்பங்களையும் பெற்று நற்செயல்களைப் புரிவதற்கும், மறுமையில் நித்தியமான ஆனந்த அனுபவத்தை அடைவதற்கும் வேதங்கள் வழிவகுத்துள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்ம மார்க்கங்களுக்கும், உபாசனா மார்க்கங்களுக்கும், ஞானமார்க் கங்களுக்கும் நாத்திக வாதங்களால் தடைகள் வராமலிருக்க அவ்வப்போது மகான்கள் தோன்றினர். அவர்களில் சிறந்து விளங்கியவர் சங்கரர். இவர் மனித உடல்கொண்டு நடமாடிய காலம் முப்பத்திரண்டு ஆண்டுகளே.

குழந்தைப் பருவம் நீங்கியபின் எட்டு வயது வரையில் குருகுல வாசம் செய்த சங்கரர், அதன்பின் பதினாறு வயதிற்குள் விஷ்ணு சஹஸ்ர நாமத்திலிருந்து, உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரங்கள் வரையில் உரைகளை யும் பல ஸ்தோத்திரங்களையும் இயற்றி விட்டார். மீதி பதினாறு வயதிற்குள் தன் சீடர்களுடன் சேதுமுதல் இமயம்வரை பாத யாத்திரை செய்து அத்வைத சித்தாந்தத்தை எங்கும் உபதேசம் செய்தார். ஒரு குறுகிய காலத்திற்கு சங்கரர் அந்தந்த அதிகாரிகளுக் குத் தகுந்தவாறு பல துதிகளையும், மந்திர சாஸ்திரங்களையும் செய்துள்ளார். கணக்கில் அடங்காத கிரந்தங்களைப் பொழிந்த சங்கரர் தம்மைப் பற்றி அவற்றில் ஒரு சிறு குறிப்பு கூட சொல்லவில்லை.

ஒரு சூத்திர பாஷ்யத்தின் இறுதிப்பகுதியில் கூறும் ஒரு வாசகம் மட்டுமே தம்மைக் குறித்து அவர் சொல்லிக்கொண்டது போல உறுதியுடன் ஒலிக்கிறது. சங்கரர் சொல்கிறார் -ஒருவன் பிரத்யட்சமாக இவ்வுடலில் இருக்கும் போதே இதயப்பூர்வ மாக பிரம்மானுபவத்தை நுகர்ந்தால், அதை மறுக்க மற்றவருக்கு ஏது ஆற்றல்! என்கிறார். அப்படி பிரம்மானுபவத்தில் சங்கரர் திளைத்திருந்ததால் தான், பிற சமயத்தினர் அவருடைய அத்வைதத்தை மறுக்கமுடிய வில்லை. அந்த தத்துவம் தேசமெங்கும் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டது.

எல்லா தெய்வங்களும் ஒன்றே என்றும்; முக்கியமாக சிவசக்தி அத்வைதம், ஹரி, ஹர அத்வைதம் ஆகியவற்றை மக்களுக்கு போதித்தார் சங்கரர். எல்லா தேவதைகளை யும் வைதீகமாகவும், மந்திர, தந்திர, சாஸ்திர முறைப்படியும் பூஜிப்பதற்கான பூஜாக்கிர மங்களை அமைத்தருளினார்.

சங்கரருடைய கலை வல்லமை குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஞான மார்க்கத்தைச் சொல்ல வந்தவர்தான் சங்கரர் அதற்கேற்ப துறவும் பூண்டார். எனினும் இதர துறவிகளுக்கு விதிக்கப்படாத சில விசேஷ காரியங்களையும் செய்தார். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கசடறக் கற்று சர்வக்ஞனாக எல்லாம் அறிந்தவனாக விரும்பினார். எதற்காக? அவருக்கு ஆசைகள் போக வில்லையா? அப்படியல்ல. கலைகளில் சிறந்த ஞானக்கலையைப் பற்றி சொன்னவர் சங்கரர். அது அளிக்கும் பிரம்மானந்தத்தை ப் பற்றிக் கூறினவர். சகல கலைகளையும் அறிந்து கொண்ட ஒருவர், அவற்றால் அடையும் இன்பத்தைவிட அத்வைதானுபவ இன்பம் தான் பெரிது என்று சொன்னால் தானே மக்களுக்கு அதில் நாட்டம் ஏற்படும். இதற்காகவே சங்கரர் எல்லா கலைகளையும் கற்றார்.

வேதம், வேதாந்தம், புராணம், இதிகாசம், இலக்கியம், தர்மசாஸ்திரம், ஜோதிடம், கணிதம், சங்கீதம், தனுர்வேதம் என எல்லாவற்றையும் பயின்றார். சங்கரர் இயற்றிய நூல்களைப் படித்தால் அவருக்கு எத்தனை கலைகளில் பாண்டித்யம் இருந்தது என்பது நன்கு தெரியும். வித்யா விநய சம்ன்னே என்று கல்வியையும் பணிவையும் சேர்த்தே கூறும் சாஸ்த்ரங்கள் அந்த வித்யை, விநயசம்பத்து இரண்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் சங்கரர். அவர் மனீஷாபஞ்சகம் பாடி, ஒரு சண்டாளனை குரு என்று போற்றியது ஒரு சான்றாகும். புத்தி இதயத்திற்குப் பணியும் போது தான் இதயத்திலுள்ள அகவொளி புலனாகும். அதுவே ஆண்டவன். அதை அறிவதே கல்வியின் பயன்.

சங்கரர் சாக்த தலங்களில் தலைசிறந்த காஞ்சியில், அம்பாளின் உருவமாக தமது ஐந்தாவது பீடமான காமகோடி பீடத்தை ஸ்தாபித்தார். நான்கு திக்குகளிலும் உள்ள பீடங்களுக்கு மூலஸ்தானம்போல் நிறுவிய இந்த பாவனமான பீடத்தில் தாமே ஆரோ கணித்தார். அட்சரங்களின் பிறப்பிடமான காமாட்சி அன்னை வாக்தேவி என்றும் போற்றப்படுபவள், இந்திர சரஸ்வதி என்பதே காமகோடி பீடாதிபதிகளின் சந்நியாச பட்டமாகும். ஸரஸ்வதி தனது விருதை சங்கரருக்கு அளித்ததால் ஸரஸ்வதி என்ற நாமம் இந்திர என்ற பட்டம் இந்திரனால் வழங்கப்பட்டது.

ஒரு சமயம் சங்கரரின் சீடருக்கு உடல் நலம் குன்றியிருந்தது. அப்போது சங்கரர் அசுவினி தேவதைகளைக் கொண்டு அவரை குணபடுத்தினார். அசுவினி தேவதைகள் இந்திரனின் ஆஸ்தான வைத்தியர்கள்.

இந்திரன் தன்னிடம் அனுமதி கேட்காமல் பணிபுரியச் சென்றதற்காக வஜ்ராயுதத்தை அசுவினி தேவதைகள் மீது பிரயோகித்தான். சங்கரர் தன் தவவலிமையால் அது அவர்களை நெருங்காதவாறு செய்தார். வஜ்ராயுதத்தின் தோல்வி தனது தோல்வியே என்று கருதிய தேவராஜன் தன் விருதாகிய இந்திரன் என்பதை சங்கரருக்கு அளித்தான்.

இவ்வாறு பாரத நாட்டில் சனாதன தர்மத்தை ஆழ வேரூன்றச் செய்ததுடன், அவதார காரியமும் முழுமை பெற்று விட்டது. தற்சமயம் எக்காலத்தையும் விட காலடி சங்கரர் என்ற தீபப்பிரகாசம் சுடரொளி பரவச் செய்கிறது. பூர்ண நதிக்கரையில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஜோதியே பிறகு நர்மதா நதிக்கரையில் ஒளிவீசி, அதன்பின் கங்கையின் சமவெளிப் பிரதேசத்திலும், ஹிமாலயத்திலும் பரவி, நான்கு பீடங்குகளையும் ஜோதி வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றது. அவ்வொளி உலகத்தையும், நம் ஆத்மாவையும் பிரகாசிக்கச் செய்யட்டும்.
 
Top