பில்லி சூனியம் போக்கும் காய்

தமிழகத்தில்பெரும்பாலான வீடுகளின் முகப்பில் கண் திருஷ்டிக்காக கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ஊமத்தையை பில்லி சூனியம் போக்கும் காய் என்றும், நச்சு தன்மை கொண்டது என்பது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். கிராமங்களில் தென்னை மற்றும் பனை மரத்தில் கள் திருடுபவர்களை பிடிக்க அதில் ஊமத்தை காயை போட்டு வைத்து திருடர்களை பிடிப்பது வழக்கம். தமிழ் திரைப்படத்தின் பல்வேறு படங்களில் நகைச்சுவைக்காக இந்த காட்சி அமைந்திருக்கும். ஆனால் ஊமத்தை என்பது மனித வாழ்வில் எத்தனை அற்புதங்களை தருகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

அகன்ற பற்கள் உள்ள இலைகள் கொண்டது. இதன் பூக்கள் நீண்ட குழலுடன் புனல் போன்று அமைந்திருக்கும். உருண்டை வடிவத்தில் உள்ள இதன் காய்களின் மேல் முட்கள் இருக்கும். இதில் வெள்ளை, பொன், கருப்பு, மருளூமத்தை என பல்வேறு வகைகள் உண்டு. கருவூமத்தையானது ஊதா நிறத்தில் உள்ள பூக்களுடன் அமைந்திருக்கும். கற்ப மூலிகையான இது சுக்கிலத்தையும் பாதரசத்தையும் கட்டும். உடலுக்கு அழகு தரும், பெரு நோய், சொறி சிரங்கு சுரம் இவற்றை போக்கும். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானே செழித்து வளரும். பொன் போன்ற நிறத்துடன் பூக்கள் கொண்ட பொன்னூமைத்தையானது புண், கிரந்தி நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிசுரம், பித்த நோய், நீங்கா விஷசுரம் இவற்றை போக்கும்.

மருள் போன்று சுருட்டிக்கொண்டு சிறிய அளவில் இருக்கும் மருளுமத்தையானது குளிர்காய்ச்சல், நீர்க்கோவை, சிறு பூச்சிகளின் விஷங்கள், மந்தம், வாதநோய் நீக்கும். இலையை சுருட்டி புகை பிடிக்க இரைப்பு மூக்கடைப்பு நீங்கும். இலையை சுருட்டி புகை பிடிக்க இரைப்பு, மூக்கடைப்பு, நீங்கும். இதனால் வாயு, எலும்பு வீக்கம், பால் கட்டிக்கொள்ளுதலால் ஏற்படும் வலி நீங்கும். இலையை நல்லெண்ணெயில் வதக்கி கட்ட வாத வலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்டவாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல் குணமடையும்.

நரம்புகள் சுருட்டிக்கொண்டு ரத்த ஓட்டம் தடைப்பட்டு வலியுடன் அவதிப்படுபவர்கள் அரிசிமாவு, ஊமத்தன் இலையும் அரைத்து களிபோல் கிண்டி ஒற்றமிட நரம்புசிலந்தி நோய் நீங்கும். இலைச்சாற்றுடன் சம அளவு நல்வெண்ணெய் கலந்து காய்ச்சி, இளம் சூட்டில் 2 துளிகள் காதில் விட்டு வந்தால் சீதளத்தால் வந்த காது வலி தீரும். இலையை நீர்விடாது அரைத்து அதனுடன் நல்லெண்ணெயில் வதக்கி நாய் கடித்த புண்ணில் கட்டி வந்தால் புண் ஆறும். இலையின் 3 துளி சாறு எடுத்து வெல்லம் கலந்து காலை மாலை 3 நாட்கள் மட்டும் கலந்து கொடுக்க நஞ்சு போகும்.

இலைச்சாறு 500மிலி, தேங்காய் எண்ணெய் 500மிலி கலந்து அதில் கடை சரக்கு என்னும் மயில் துத்தம் 30 கிராம் போட்டு சுண்டக்காய்ச்சி பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்து கொண்டு அனைத்து வகையான புண்களுக்கு மேல் பூச்சாக தடவி வர குணமடையும். வெறி நாய் கடித்தால் கரும்பு வெல்லத்தில் இலையின் சாறு 1 முதல் 3 துளி வரை விட்டு உள்ளுக்கு 3நாள் கொடுத்து, பால் சோறு, மோர் சோறு, கொடுக்க நஞ்சு நீங்கும். மருந்துண்ணும் காலத்தில் உப்பு, புளி நீக்கவேண்டியது அவசியம். (மூன்று நாட்கள் கடும் பத்தியம்) இதைத்தான்

நாய்க்கடியான் வந்து நலிசெய் விரணமும்போம்
வாய்க்குழிப்புண் கட்டிகளு மாறுங்கள் தீக்குணத்தைச்
சேமத்தில் வைத்திலிடந் தீரு முத்தோடங் களறும்
ஊமத்தை யின்குணத்தை யுன்னு-, என்கிறது அகத்தியர் குணவாகடம்.

40வயதிற்கு உட்பட்வர்கள் தலையில் புழுவெட்டால் முடி முளைக்காமல் இருந்தால் ஊமத்தை பிஞ்சை எடுத்து அவரவர் உமிழ் நீரில் மைய அரைத்து புழுவெட்டு உள்ள இடத்தில் தடவிவர தலையில் உள்ள புழுவெட்டு தீர்ந்து -முடி முளைக்கும். சிறு அளவில் நச்சு தன்மை கொண்டதால் ஊமத்தையை அரைத்த பிறகு கைகளை நன்றாக கழுவிட வேண்டும்.

பூ, விதை, இலையை பாலில் போட்டு வேகவைத்து அதனை நிழலில் காய வைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு சுடு நெருப்பில் போட்டு அந்த புகையை உள்ளிளுத்தால் இழுப்பு, மூச்சு திணறல், குமாகும்.

கோடை காலத்தில் சிலர் தன் நிலைமாறி பிதற்றுவதும், வெறித்துப் பார்ப்பதும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு ஓடுவதுமாய் இருப்பார்கள். இதை பில்லி சூனியம் என்பார்கள். ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதுபோல் 5 முதல் 7 நாட்கள் வரை குளிக்க வைத்தால் சித்தபிரமை, கண்மந்தம், பைத்தியம் குணமாகும்.

விதைகளை மென்மையாக அரைத்து வெளிப்பூச்சாக தடவி வர பற்சிதைவினால் ஏற்படும் வலி மூலம், கொன்னி கரப்பான், சொறி வெண்மேகம் ஆகியவை தீரும்.

வாதமறும், பித்த மயக்கமுறு மாநிலத்திற்
றீது கரப்பான் சிரங்ககலுங் கோதாய்கேள்
மாமத்த மாகும் வறசியெல் லாம்போகும்.
ஊமத்தங் காய்க்கென் றுரை. என்கிறது.

அகத்தியர் குணவாடகம். சிறுது வெறுப்புடன் கூடிய மணத்துடன் காணுமிடமெல்லாம் செழித்து வளர்ந்து கிடக்கும். ஊமத்தையை பக்குவமாய் எடுத்து பயன்படுத்தி, நோய் தீர்த்து நலமுடன் வாழலாம்.
 
Top