பித்துக்குளி முருகதாஸ்

தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் 1995-ம் ஆண்டு ‘உலக இந்துக்கள் மாநாடு’ நடந்தது. அதில் கலந்துகொண்ட முக்கிய விருந்தினர் தென்னாப்பிரிக்கத் தலைவர், மக்கள் நாயகன் நெல்சன் மண்டேலா. இந்தியாவிலிருந்து சென்றிருந்த ஒரு பாடகரும் அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார் ! பல்லாயிரக்கணக்கான பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட அந்தப் பெருங் கூட்டம், அந்தப் பாடகரைப் பாடச் சொல்லிக் குரல் எழுப்பியது. ஆரவாரக் கூச்சலின் நடுவே அவர் பாட எழுந்தார். கூட்டத்திலிருந்து எழுந்த உற்சாகக் குரல் விண்ணைப் பிளந்தது. பாடத் தொடங்கினார் அந்தப் பாடகர். அவரின் காந்தர்வக் குரலில் கூட்டம் மெய் மறந்தது. நெல்சன் மண்டேலாவுக்கு வியப்பான வியப்பு !

பாடி முடித்துத் தன் பக்கத்தில் அமர்ந்த அந்தப் பாடகரிடம் ஒரு புன்னகையோடு சொன்னார்

“என் நாட்டுல என்னைவிட உங்களுக்குத்தான் அதிகம் செல்வாக்கு இருக்கும்போலத் தெரியுது !”

அந்தப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ்.

அழகன் முருகனின் புகழைப் பாடுவதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆத்மா.

மண்டேலா சொன்னது ஓரளவு உண்மையும்கூட. தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் பித்துக்குளி முருகதாஸுக்கு ரசிகர்கள் அதிகம். இரண்டு நாடுகளுக்கும் நாற்பது, ஐம்பது முறைக்கு மேல் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார். 1982-ல் இவர் தென்னாப்பிரிக்கா சென்று கச்சேரிகள் செய்தார்.

‘இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா சென்றதால், இவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்’ என்று நாளேடுகளில் செய்தி வெளியாகியது. அப்படிக் கைது செய்யவில்லையாயினும், டி.வி., ரேடியோ இரண்டிலும்
இவர் பாடுவதற்குத் தடை விதித்துவிட்டது அரசாங்கம். சில ஆண்டுகள் வரை அந்தத் தடை நீடித்தது.

கோயம்புத்தூரில் குடும்பம்.
சின்ன வயதில் இவர் ஒருமுறை, தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்த பிரம்மானந்த பரதேசியார் என்னும் மகாஞானி மீது விளையாட்டாகக் கல் எறிந்தார். அவர் இந்தச் சிறுவனைத் திரும்பிப் பார்த்து, “அடேய் ! நீ என்ன பித்துக்குளியா?” என்று செல்லமாகக் கடிந்துகொண்டார்.

‘பித்துக்குளி’ என்ற அந்தச் சொல் விநோதமாக இருக்கவே,

அது இவரின் இளம் மனதில் ஆழமாகப் படிந்துவிட்டது.

பள்ளிக்கு விடுமுறை விட்டதுமே பழநிக்கு பஸ் ஏறிவிடுவார். காரணம், அங்கே இவரது சித்தி குடும்பம், முருகன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. எனவே, தினமும் படியேறி பழநி முருகனைத் தரிசித்து வருவது பக்திமார்க்கமான பொழுதுபோக்கு ஆகிவிட்டது. நாளாக நாளாக தண்டாயுதபாணித் தெய்வத்தின்மீது பித்தாகிப் போனார். அந்த ஞானி சொன்ன சொல்லும் அடிக்கடி மனதில் வந்துபோய்க் கொண்டிருந்ததால், ‘பாலசுப்ரமணியன்’ என்கிற தன் இயற்பெயரைப் 'பித்துக்குளி முருகதாஸ்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.

சிறு வயதில் விளையாடும்போது கண்ணில் அடிபட்டு ஒரு கண்ணை இழந்தாலும், அதன் காரணமாகத் தன் மீது யாரும் பரிதாபம் கொள்ளக்கூடாது என்பதற்காகக் கடைசிவரை கூலிங் கிளாஸ், காவித் தலைப்பாகை என தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய ஏழு மொழிகளையும் தெளிவாக உச்சரித்துப் பாடும் திறமை இவருக்கு இருந்தது. சங்கீத சாம்ராட், கலைமாமணி, மதுரகான மாமணி, சங்கீத நாடக அகாடமி விருது, தியாகராஜர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பித்துக்குளி முருகதாஸும் சாண்டோ சின்னப்பா தேவரும் நெருங்கிய நண்பர்கள்.

'தெய்வம்’ திரைப்படத்தில்,
'நாடறியும் இந்த மலை,
நான் அறிவேன் சுவாமி மலை’

என்னும் பாடலை, சம்பளம் வாங்காமலே பாடிக் கொடுத்தார். அதற்கு ஈடாக, முருகதாஸ் கை காட்டிய ஒரு கிராமத்துக்கு, ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி கட்டிக் கொடுத்தார் சின்னப்பா தேவர். அந்த அளவுக்குப் பொதுநலனிலும் அக்கறை கொண்டிருந்தவர் முருகதாஸ்.

ரஜினிகாந்த்தின் குருவான சச்சிதானந்த சுவாமிகளோடு சிறு வயதில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் இவர். சுத்தானந்த பாரதியார், மகாகவி சுப்ரமணிய பாரதியார் என பலருடன் நெருங்கிப் பழகியவர். ரமண மகரிஷியுடன் பழகி, அவரைத் தன் ஆன்மிக குருவாக வரித்துக் கொண்டவர். 'நான்’, 'எனது’ என்று சொல்வது அகந்தை என்பதால், இவர் அந்த வார்த்தைகளைக் கடைசி வரை உச்சரித்ததில்லை. தன்னைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம்

'இவன் பாடினான்.....
இவன் கச்சேரிகள் செய்தான்......’

என்றுதான் சொல்வார்.

1920-ம் வருடம் ஜனவரி மாதம் 25-ம் நாள், தைப்பூச நன்னாளில் பிறந்த முருகதாஸ், முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதப் பிறப்பும் கந்த சஷ்டி தினமுமான 2015 நவம்பர் 17 அன்று, தனது 95-வது வயதில் முருகப் பெருமானின் திருவடிகளில் ஐக்கியமானார். பார்க்கிறவர்களிடமெல்லாம் “தமிழை மறந்துவிடாதே ! தெய்வத்தைத் துறந்துவிடாதே !’ என்று ஓயாமல் உபதேசித்துக்கொண்டிருந்தவர்
 
Top