கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

**

தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மகாலட்சுமிக்கு உண்டானது. இதையடுத்து அவர் தவம் இருந்து நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்ட தலம் இதுவாகும். நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து திருமாலின் அனுக்கிரகம் பெற்ற சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார்.

இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார். சாளக்கிராம கல்லை கீழே வைக்கக்கூடாது என்று யோசித்த ஆஞ்சநேயர், அங்கு தவம் செய்து கொண்டிருந்த திருமகளிடம் அந்த கல்லைக் கொடுத்து விட்டு நீராடச் சென்றார்.

ஆஞ்சநேயர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால், சாளக்கிராமக் கல்லை கீழே வைத்தாள் திருமகள். அந்த கல்லே, மிகப்பெரிய மலையாக உருவானதாகவும், மலை மீது நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் காட்சி அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது.

சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன், நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
 
Top