ஆண்டாள் இடது கையில் கிளி வைத்திருக்க காரணம்

ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம்.

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.
 
Top