அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் - பழனி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி என்னும் ஊரில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பழனி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதி உண்டு. அடிவாரத்திலிருந்து இந்த மலை மீது ஏறுவதை எளிமையாக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இந்த கோயில் முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.

இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இவர் கையில் உள்ள தண்டம் மிகவும் அருள் வாய்ந்தது.

வேறென்ன சிறப்பு?

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பிரார்த்தனைகள் செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்தும், அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
Top